Saturday, January 14, 2012

தை ஒன்றே!, தமிழரின் புத்தாண்டு!!

அன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

சரவணா!!, உனக்கு என்ன ஆச்சு!, சித்திரை ஒண்ணுதானே தமிழ் புதுவருடம், அந்த கருணாநிதிதான் அறிவில்லாம மாத்தினார். இப்பதான் அம்மா வந்து அதை சரி பண்ணீட்டாஙக்ளே, அதெல்லாம் உனக்குத் தெரியாதா?, என்று என் மீது அக்கறையோடு கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இனி வரும் பத்திகளை படிக்க வேண்டுகிறேன். 

நமது நாட்காட்டிகள் சூரியனை அடிப்படையாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன.ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப் பட்ட பகுதியில் விழுகிறது.நமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாய் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து கிளம்பி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம்.


இதெல்லாம் நிரூபிக்கப் பட்டு, நடைமுறையில் இருக்கும் அடிப்படை அறிவியல், இப்போது கொஞ்சம் தமிழர்களின் பக்கம் வருவோம். 

தமிழ் ஆண்டுகள் மொத்தம் அறுபது. இவை சுழற்சியில் வரும். ஆண்டுப் பிறப்பு சித்திரை மாதம் ஒன்றாம் தேதியில் துவங்குவதாக காலம் காலமாய் நம்பி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் தனித் தனி பெயர் உண்டு.எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள். ஒன்று கூட தமிழ் பெயர் கிடையாது.இவை எல்லாம் அரச குமாரர்களின் பெயர்களாம். யாரிந்த அரச குமாரர்கள்?, அவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?....அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதையிது!

அபிதான சிந்தாமணி என்கிற நூலில்தான் இந்த அறுபது அரச குமாரர்களின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. கலியுக வரதனான கண்ணனும், நாரதரும் கலவி செய்ய பிறந்தவர்கள்தான் இந்த அரச குமாரர்கள். நாரதர் ஆணாயிற்றே என சந்தேகம் வந்தால் அதற்கும் அந்த நூலில் விளக்கம் இருக்கிறது. கண்ணன் அறிவுரைப் படி யமுனையில் குளித்த நாரதர் பெண்ணாகிறார்.இருவரும் கூடி மகிழ்ந்து ஆண்டுக்கொன்றாய் அறுபது பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களிலே தமிழ் வருடங்கள் அறுபதாயிற்று. 

இதுதானா தமிழனின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்?. இதையா காலம் காலமாய் போற்றிக் காத்திட வேண்டுமென நினைக்கிறீர்கள்?. 

இப்போது கொஞ்சம் அறிவார்த்தமாய் அலசுவோம்.தமிழர்களின் வானியல் அறிவு மிகவும் பழமையானது,உயர்வானது, இன்றைய கால அளவுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. இன்னும் சொல்வதாயின் தற்போதைய கால அளவைகளை விடவும் மிகத் துல்லியமானது. ஒரு நாளை ஆறு பொழுதுகளாக, அறுபது நாழிகைகளாய் பிரித்து கூறியிருக்கின்றனர்.அதே போல ஒரு ஆண்டினை ஆறு பருவ காலமாய் பிரித்திருக்கின்றனர். இது மற்ற சமூக இனங்களில் காண முடியாதது. இவை எல்லாம் இன்றைக்கும் பொருந்தி வருவதில்தான் தமிழனின் மேதமை தனித்து மிளிர்கிறது. 

இத்தனை தெளிவுடையவர்களுக்கு ஆண்டின் முதல் நாளினை நிர்ணயிக்கத் தெரிந்திருக்காதா? மிக நிச்சயமாக தெரிந்தேதான் தை மாதத்தின் முதல் நாளினை ஆண்டின் முதல் நாளாக அமைத்திருந்தனர். பக்தி மார்க்கம் மற்றும் வேத மரபின் ஆதிக்கத்தினால் பழந்தமிழரின் அறிவார்த்தமான செயல்கள் அடிபட்டுப் போய்விட்டன. 

தமிழர்கள் ஒரு ஆண்டினை ஆறு காலமாய் பிரித்திருந்தனர் என்று பார்த்தோம். அவை இளவேனிற் காலம் (தை,மாசி மாத காலம்),முதுவேனில் காலம்(பங்குனி,சித்திரை மாத காலம்), கார் காலம்(வைகாசி,ஆனி மாத காலம்),கூதிர் காலம்(ஆடி,ஆவணி மாத காலம்),முன்பனிக் காலம்(புரட்டாசி,ஐப்பசி மாதக் காலம்),பின்பனிக் காலம்(கார்த்திகை,மார்கழி மாத காலம்) ஆகும். இந்த ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு மாதஙக்ளை உள்ளடக்கியது. 

இந்த மாதங்களை தமிழர்கள் எப்படி வகுத்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இப்போதைய புவியியல் அறிஞர்கள் கற்பனையான ரேகைகளைக் கணக்கில் கொள்வதைப் போல அன்றே தமிழர்கள் பூமியை முப்பது டிகிரியாக பன்னிரெண்டு பாகங்களாய் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு இராசியின் பெயரைச் சூட்டினர். இந்த பன்னிரெண்டு ராசிக்கு என இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் தரப் பட்டிருந்தன.இதையொட்டியே சோதிட அறிவியல் அமைகிறது. சூரியன் இந்த ராசிகளில் நுழையும் காலத்தை அந்த மாதங்களின் ஆரம்ப தினமாக வரையறுத்தனர். 

இந்த இடத்தில் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முப்பது டிகிரியில் சூரியன் பயணிக்கும் போது வரும் முழு நிலவு தினத்தன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ,அதன் பெயரே அந்த மாதங்களின் பெயர்களாய் குறிக்கப் பெற்றன. இம் மாதிரியான அறிவியல் ரீதியான தகவல்கள் எல்லாம் மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் நம்மிடம் இருந்து மறைக்கப் பட்டன. இவை தற்செயலாக நிகழ்ந்ததா இல்லை திட்டமிட்டு செய்யப் பட்டதா என்பது முடிவில்லாத விவாதத்தையே உண்டாக்கும். 

இனி தை ஒன்று ஏன் தமிழ் புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அலசுவோம். 

தமிழர்கள் பருவ காலத்தை ஆறு பிரிவாகக் கூறியிருப்பதை மேலே பார்த்தோம். அதில் இளவேனிற் காலமே முதல்வாவதாக வருகிறது. இந்த காலத்தின் முதல் மாதமாக தை மாதம் இருக்கிறது. முதல் பருவ காலத்தின் முதல் மாதம் என்ற வகையில் தை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்கமாக இருக்க வேண்டும். இதை யாரும் மறுத்திட முடியாது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். போக்கி என்பதன் மருவலே போகி ஆனது. பழையனவற்றை கழிக்கும் ஒரு நாளாக இதை தமிழர்கள் காலம் காலமாய் கொண்டாடுகிறார்கள். பழையனவற்றை மார்கழியின் கடைசி நாளில் கழித்தால், தை முதலாம் தேதியன்று புதிதாக எதையோ துவங்குவதாகத்தானே ஆகும். 

சமூக மற்றும் வரலாற்றியல் ரீதியாக இந்த நாளில் வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி, தோரணம் கட்டி, சர்க்கரைப் பொங்கலிடுதல் என அடிப்படையில் ஒரு கொண்டாட்ட தினமாகவே இருந்து வருகிறது. வேறெந்த மாத துவக்கத்தின் முதல் நாளுக்கும் இத்தகைய கொண்டாட்டஙக்ள் இல்லை என்பதை மனதில் கொள்ளவும். 

நவீன அறிவியலின் படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதிதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. சூரியனை நெருங்கி வரும் இந்த நாளில் தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலிடுவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இது தற்செயலாக நிகழ்கிறதா இல்லை நமது முன்னோர்கள் தீர ஆராய்ந்து இந்த நாளை ஆண்டின் துவக்கமாக அமைத்திருக்கலாம்.

மார்கழி மாதத்தின் கடைசி வாரங்களை சோதிட இயலில் கர்பக் காலம் என்று கூறுவர்.கிராமப் புறங்களில் இதை தெப்பக் காலம் என்று இப்போதும் கூறுவதுண்டு. இந்த கால கட்டத்தில்தான் அடுத்த ஓராண்டுக்கு மழை பெய்யுமா?, எப்போது பெய்யும்?, எவ்வளவு பெய்யும்? என்றெல்லாம் கணிப்பார்கள்.இது வேறெந்த மாதத்திலும் இல்லை. தை துவங்கி மார்கழி வரையிலான ஓராண்டிற்கு இந்த கணிப்பு முறை பயன்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற் சொலவடை இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. வழி பிறத்தல் எனப்து ஒரு புதிய ஆண்டின் துவக்கத்தையே குறிக்கிறது. 

இவை தவிர இன்னும் சில ஆதாரங்களிருக்கின்றன, இந்த தைத் திருநாளின் சிறப்பினை பல்வேறு பழந்தமிழ் நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. 

தமிழன் இயற்கையோடு இனைந்த வாழ்க்கையை வாழ்ந்தவன், இந்த ஆறு பருவ காலங்கள் ஒவ்வொன்றாய் அவன் வாழ்க்கையை ஆள்வதையே ஆண்டு என்று குறிப்பிடுகிறான். ஆறு பருவம் அவனை ஆண்டால் அதை ஒரு சுற்றாக, பூரணமாக கணக்கிட்டான்.இப்படித்தான் தமிழனின் ஆணடுகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தது. இதை மீட்டெடுத்து சிறப்புச் செய்வதே நாம் நம் மூதாதையர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாய் இருக்கும். 

 நண்பர்களே!, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்,புராணங்கள் கூறும் ஆபாசக் கதையின் ஊடாக ஒரு இனத்தின் ஆண்டுகள் அமைந்திருக்குமா?, அல்லது தேர்ந்த வானியல் அறிவுடன் பருவ காலத்தை முன் வைத்து ஆண்டுகள் அமைக்கப் பட்டிருக்குமா?. 

என்னுடைய நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வுகளை அவமதிப்பதில்லை. காலம் காலமாய் மறைக்கப் பட்டிருக்கும் ஒரு இனத்தின் ஆதார உரிமைகளை மீட்டெடுத்து சிறப்பிக்க நினைக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. 

 மீண்டும் ஒரு முறை..... 

அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, January 10, 2012

பழநி முருகன் கோவில் ஓரு.......!!


மாம்பழத்துக்காக பெற்றோருடன் கோவித்துக் கொண்ட முருகன், மயில் மீதேறி பறந்து ஒரு மலையின் உச்சியில் லேண்ட் ஆன புராணக் கதையின் மிச்சமும் எச்சமுமே இன்றைய பழனி. 

அடேடே! ஒரு பொடியன் மயில் மீதேறி பறந்தானா?, அந்தக் காலத்து மயில்கள் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு பறக்குமா? பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்லுமளவுக்கு பக்குவமும், அறிவும் உள்ள சிறுவன், ஒரு மாம்பழத்திற்காக கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடுவானா?....இப்படியெல்லாம் கேள்வி கேட்பீர்களானால் தெய்வகுத்தம் வந்து கூடிய சீக்கிரத்தில் உங்கள் தலையில் இடி விழும் சாத்தியங்கள் இருக்கின்றன. 

இந்த மலைக்கும் கூட ஒரு கதை உண்டு. இடும்பன் என்னும் அரக்கன் தற்போதைய பழனி மலையினையும், அதன் பக்கத்தில் இருக்கும் இடும்பன் மலையையும் ஒரு கம்பின்(!) இரு முனைகளில் கட்டி காவடியாக தூக்கிக் கொண்டு வந்தானாம். ஓய்வெடுக்க வேண்டி இந்த மலையினை இப்போது இருக்கும் இடத்தில் இறக்கி வைத்தானாம். திரும்ப கிளம்பும் போது பார்த்தால் முருகன் ஒரு மலையின் மீது சிறுவனாக நின்று கொண்டிருந்தாராம். 

இறங்கச் சொல்லிக் கேட்டு முருகன் இறங்காததனால் அவர் மீது பாய்ந்து 
சண்டை பிடிக்க, முருகன் இடும்பனைக் கொல்ல, இடும்பனின் மனைவி இடும்பி கெஞ்ச, மனமிரங்கிய முருகன் இடும்பனை உயிர்ப்பித்து அவனை தனது வாயிற் காப்போனாக வைத்துக் கொண்டாராம். நலல வேளை, அப்போது அம்மாவின் ஆட்சி இல்லை, இருந்திருந்தால் இன்னேரத்துக்கு முருகன் மீது மலை அபகரிப்பு வழக்கு போட்டிருப்பார்.

என்னது!!, 412 அடி உயரமுள்ள மலையை தூக்கும் அளவுக்கு ஆகிருதியான உயரமும், பலமும் உள்ள ஒருவனை, அவன் தூக்கி வந்த மலையின் மீது நின்ற நான்கடி உயரச் சிறுவன் கொன்றானா?, இதெல்லாம் சாத்தியமா?...இதை விடுங்கள்!, தூக்கிக் கொண்டு வந்தவனுக்கு மலை சொந்தமா?, இல்லை அதில் அடாவடியாக ஏறி நின்று கொண்டிருந்தவனுக்கு மலை சொந்தமா? என்ன கொடுமையிது!!

இனி, இந்த புராணக் காமெடிகளை எல்லாம் ஒரு பக்கமாய் ஒதுக்கி வைத்து விட்டு இருக்கிற கொஞ்சம் சீரியஸாய் பேசுவோம்.

ஒரு உண்மை தெரியுமோ!, திருமுருகாற்றுப் படை மாதிரியான பழந்தமிழ் நூலின் பாடல்களில் பழனி மலையோ அல்லது அதன் உச்சியில் கோவில் கொண்டிருக்கும் தண்டாயுதபாணி சுவாமி பற்றியோ குறிப்புகள் இல்லை. மாறாக பழனியின் அருகாமையில் இருக்கும் திருவாவினன் குடிதான் மூன்றாவது படைவீடாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.இதனை.......ஆவினன் குடி அசைதலும் உரியன் என்றே நக்கீரர் குறிப்பிடுகிறார். 

இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாக கருதப் படும் இந்த நூலில் பழநி தவிர மற்ற படைவீடுகள் எல்லாம் துல்லியமாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.இந்த கோவிலின் மூலவரான குழந்தை வேலாயுத சுவாமியைத்தான் பின்னாளில் வந்த அருணகிரி நாதரும் குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.

கீழே திருவாவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமியாக, தேவியருடன் காட்சி தரும் முருகன், மலை மீது ஜடா முடியுடன் கோவணாண்டியாக துறவிக் கோலத்தில் நிற்கிறார். அது எபப்டி?, கீழே தேவியர், மேலே துறவிக்கோலம் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தால் மறுபடியும் புராணக் காமெடிகள் நுழைந்து விடும்.இப்போது அது தேவையில்லை நமக்கு....

அடிப்படையில் முருகன் குறிஞ்சி நிலத்தின் தலைவன் அல்லது கடவுள்.குறிஞ்சி நிலத்தின் அடையாளங்களான மயிலும், சேவலும், ஆட்டுக் கிடாயும்,தேனும், தினைமாவும் முருகனின் அடையாளங்களாய் இன்றளவும் இருந்து வருகிறது. இந்த அடியாதாரங்களின் அடிப்படையில் முருகன் வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவனாகவோ அல்லது வேடர்களின் குறுந் தெய்வமாகவோ அல்லது காவல் தெய்வமாகவோதான் இருந்திருக்க வேண்டும். 

முருகனை தங்களின் கடவுளாய் தொழுதவர்கள் தங்களை கௌமார மதத்தினராக அடையாளப் படுத்திக் கொண்டனர். இதை மதம் என்று சொல்வதை விட தொல் சமூக குழும அடையாளமாக கருதிடலாம். 

சித்தர் மரபில் பாலவர்க்கம் என்றொரு பிரிவு உள்ளது. இவர்களின் ஆதிகுருவாக சித்தசேனன் என்பாரைக் குறிப்பிடுகிறார்கள். இவர்தான் முருகன் என்றொரு கருத்தாக்கம் உண்டு. தற்போதைய பழநிக்கு முன்னாளில் சித்தன் வாழ்ந்தான் என்றொரு பெயர் இருந்ததை இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.இந்த வகை சித்தர்கள் மூலாதாரத்தில் பதுங்கியிருக்கும் குண்டலினியை எழுப்பி துரியத்துக்கு உயர்த்துவதன் மூலம் யோகசித்தி நிலையை எட்டியவர்கள். இதுவே இந்த மரபினரின் இறை நிலையாக கருதப் படுகிறது.

இப்போது கொஞ்சம் பகீரென ஒரு கோணத்தில் அலசுவோம். 

சங்க காலத்தின் இறுதியில் தமிழகத்தில் காலடி வைத்த சமணம் மற்றும் பௌத்த மதங்கள் பத்தாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் மற்ற பிற மதங்களுக்கு இனையாக செழித்தோங்கி இருந்தன. அதிலும் சமணம் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்திருந்தது. இதற்கு அரசர்களின் ஆதரவும் இருந்ததற்கான ஆதாரங்கள் நம்மிடையே உண்டு. பதினோராம் நூற்றண்டின் பிற்பாதியில் பெருகிய பக்தி இயக்கத்தின் முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் சமணமும், பௌத்தமும் தமிழகத்தில் அழியத் துவங்கின. இந்த அழிப்புகள் பதின் மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் முழுமை பெற்றதாக தெரிகிறது.

இந்த அழிப்புகள் இரண்டு வகையாக நடந்தேறியிருக்கின்றன. ஒன்று முற்றாக சமணர்களை கொன்றொழித்தது. அவர்களின் நூல்கள், 
குடியிருப்புகள் போன்றவைகளை தீயிலிட்டெரித்தது. அழிக்க முடியாத இருப்பிடங்களை மாற்றங்கள் செய்து அவற்றிற்கு புராணங்களை உருவாக்கி இந்து மயமாக்கியது. அவ்வந்த மடாலயங்களின் இருப்பிடத்தைப் பொறுத்து அங்கே பிரபலமாயிருந்த குறிப்பிட்ட கடவுளர்களுக்கான கோவிலாக்கியது என்பதாக இந்த உருமாற்றங்கள்.

இதற்கு நிறைய கோவில்களை உதாரணமாகக் காட்டிடன் முடியும்.திருப்பதி வெங்கடாசலபதி கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில், பழநி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,அழகர் கோவில்,மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் இவை எல்லாம் ஒரு காலத்தில் பௌத்த அல்லது சமண மடாலயஙக்ளாக இருந்திருக்கவே வேண்டும். 

ஆகம விதிகளின் படி அமைக்கப் பட்டிருக்கும் கோவில்கள் என்றால் அவற்றின் அமைப்பில் ஒரு ஒழுங்கும், நேர்த்தியும் இருக்கும். அங்கே மூலவருக்கே முதல் மரியாதை, மற்ற தெய்வங்களுக்கு தனித் தனி சந்நிதிகள் இருந்தாலும் மூலவருக்கான முக்கியத்துவம் உயர் தனித்துவமானது. அவருக்கென பரிவார தேவதைகள் சரியான இடங்களில் அமர்த்தப் பட்டிருப்பார்கள். கொடி மரத்தில் இருந்து மூலவருக்கான தூரம், உயரம், திசை என எல்லாவற்றிற்கும் கணக்கு உண்டு. அதை விளக்க ஆரம்பித்தால் இந்த பதிவின் நோக்கம் திசைமாறிவிடும்.

 மேலே சொன்ன கோவில்களில் இம் மாதிரியான ஒழுங்குகள் இல்லை என்பதை நிச்சயமாக கூறிட முடியும். அல்லது இந்த பரிவார தேவதைகள் வலிந்து சொருகப் பட்டிருப்பதை கவனிக்கலாம்.

தொடரும்...

Saturday, January 7, 2012

பதினாறாவது சென்னை புத்தகக் காட்சி....?

சென்னைக்கு இது 35 வது புத்தக கண்காட்சியாக இருக்கலாம். 1996 ல் இருந்து போய்க் கொண்டிருக்கும் எனக்கு இது பதினாறாவது புத்தக கண்காட்சி.:)

மகளுக்கு இன்று அரைநாள் பள்ளி, மகனுக்கோ விடுமுறை. மதியம் பள்ளியில் இருந்து மகளை அழைத்துக் கொண்டு நேரே புத்தகக் காட்சிக்கு போவதாக திட்டம். அண்ணா நகரில் மெட்ரோ ரயில் வேலைகள் தீவிரமாய் நடப்பதால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல ஊரைச் சுற்றிக் கொண்டே பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். இன்றைக்குப் பார்த்து என் ட்ரைவரும் லீவ்.

தொடர் ட்ராஃபிக் நெரிசலில் மெதுவே ஊர்ந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை 1 மணி வாக்கில் எட்டினேன். திரும்பிய பக்கமெல்லாம் கார்கள். கார் நிறுத்த முப்பது ரூபாய். ஒரு வழியாய் இடத்தை தேடிப் பிடித்து வண்டியை நிறுத்தி புத்தகக் காட்சிக்குள் காலடி வைத்தோம்.
கடந்த 1996ல் இருந்து தொடர்ச்சியாக புத்தக கண்காட்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.ஒவ்வொரு வருடமும் உள்ளே நுழையும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏற்பாடுகளில் ஏதோவொரு நேர்த்திக் குறைவு ,அல்லது இன்னமும் நன்றாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை. குறைந்த பட்சம் பத்து முதல் பதினைந்து லட்சம் வரையில் பார்வையாளர்கள் வந்து போகக் கூடிய வகையில் ஏற்பாடுகள் இருக்கிறதா என்றால்!, நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் சேதாரங்கள் பெரிய அளவில் இருக்கும் என்பது மட்டும் உண்மை.வருடாவருடம் நடப்பதைப் போலவே இந்த வருடமும்  கடைகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஒரே மூச்சில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நடந்தாலும் இரண்டு மணி நேரம் சுற்றலாம். நவீன வேளாண்மை அரங்கில் இருந்து துவங்கினேன். நான் பார்த்த வரையில் இந்த வருடம் புதிய புத்தகங்கள் குறைவாக வந்திருப்பது போலவே தோன்றியது. நிறைய இளைஞர்கள் புத்தகம் வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். எல்லா கடைகளிலும் சொல்லி வைத்தாற்போல இளையோர் கூட்டம் அதிகமாய் இருக்கிறது. 

பெரியாரின் புத்தகங்களை நிறைய பேர் வாங்கிக் கொண்டிருந்தனர்.  முன்னாள் நாத்திகன் என்ற வகையில் இந்தக் காட்சி பார்ப்பதற்கே மகிழ்வாயிருந்தது.தமிழனுக்கு பகுத்தறிவை வளர்க்க இன்றைக்கும் பெரியாரை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.கல்லூரியில் என்னுடன் படித்த திருமதி ராஜி அவர்கள், சுற்றுப் புற சூழலை காக்க பெரிய அளவிளான இயக்கங்கள் தேவையில்லை, நம்மளவில் ஒவ்வொருவருமே சிறப்பான பங்களிப்பினை செய்திட முடியும் என்பதை வலியுறுத்தி நூலொன்றினை வெளியிட்டிருக்கிறார்.தமிழர்களுக்காக தமிழிலும், டமிலர்களுக்காக(!) ஆங்கிலத்திலும் இரு மொழிப் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் தமிழில்.புத்தகத்தின் பெயர் “சின்னஞ்சிறு செயல்கள்....உங்கள் சுற்றுச்சூழலை காக்க....”,ஆங்கிலத்தில் /"One step at time for a sustainable environment",

இம் மாதிரியான முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். முழுமையாக வாசித்த பின் ஒரு மதிப்புரையிட உத்தேசித்திருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முப்பது வழிகளை ஆசிரியர் இந்த நூலில் வலியுறுத்தி இருக்கிறார். ஸ்டால் நம்பர் 136, வசந்தா பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை 100 ரூபாய். அவசியம் வாங்கிட வேண்டிய புத்தகமாய் இதை பரிந்துரைக்கிறேன்.


கீழே இருக்கும் படத்தை அவசியம் சொடுக்கி பெரிதாக்கி பாருஙக்ள். எத்தனை நீளமான வரிசை....அறிவுப் பசியை போக்கவா இத்தனை நீள வரிசை யாரும் என நெகிழ்ந்து விடவேண்டாம். காட்சி அரங்கிற்கு வெளியே இருக்கும் ஃபுட்கோர்ட் ல் சாப்பிட காத்திருக்கும் உணவுப் பசியாளர்கள். இத்தனை பேர் வந்து போகுமிடத்துக்கு தேவையான வசதிகள் இல்லை என ஆரம்பத்தில் இதைத்தான் குறையாகச் சொன்னேன். 


அந்தக் காலத்து டூரிங்கொட்டாய் சினிமா அரங்கினை நினைவு படுத்தும் மகா மட்டமான அரங்க முகப்பு. பதிப்பாளர்களின் ரசனை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கான குறியீடாய் இந்த அரங்க வடிவமைப்பை பார்க்கிறேன்.


இன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன்.....வாங்க வேண்டிய புத்தகங்களையும், ஸ்டால் எண்களையும் குறித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அடுத்த வாரம் போக வேண்டும். :)