Tuesday, February 17, 2015

நானே சிவன்....


எட்டு வயது சிறுவனான ஆதி சங்கரன் இமயத்தில் தனக்கான குருவைத் தேடி அலைந்த பொழுதில் சுவாமி கோவிந்தபாத ஆச்சார்யார் என்பவரை எதிர்கொண்ட போது அவர் சங்கரனிடம் ‘”நீ யார்?” என்று கேட்டராம். அதற்கு சங்கரன் சொன்ன பதிலை ‘”நிர்வாண சதகம்” அல்லது ‘”ஆத்ம சதகம்” என்கிறார்கள்.

மொத்தம் ஆறு பாடல்கள். எட்டு வயதில் ஒரு சிறுவன் இப்படியெல்லாம் யோசித்திருக்கவும், பதில் சொல்லியிருக்கவும் முடியுமா என்பதும், அதைத் தொடரும் விவாதங்கள் இப்போதைக்கும் ஒரு பக்கம் இருக்கட்டும் .பிரிதொரு தருணத்தில் அதை பிரித்து மேய்வோம்.

இப்போதைக்கும் இந்த ஆறு பாடல்களில் எனக்குப் பிடித்த அல்லது புரிந்த ஒரு பாடலை மொழி பெயர்த்துப் பார்க்கும் ஒரு சிறுமுயற்சியே இந்த பதிவு.

ஏற்கனவே உள்ளூர் தக்‌ஷின பாரத ஹிந்திப்ரச்சார சபாகாரர்கள் நடத்தும் எல்லாத் தேர்வுகளையும் எழுதி பாஸாகி இருந்தாலும், சமஸ்க்ருதத்தையும் முறைப்படி படிக்கலாமென்று தீர்மானித்து அண்ணாநகரில் ஒரு ஆசிரியரிடம் போனேன். எல்லாம் விசாரித்துவிட்டு விஜயதசமியன்று வகுப்பை ஆரம்பிக்கலாம் என்று சொன்னவர், பேச்சுவாக்கில் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டார்......அடுத்த நிமிடமே ஒரு புண்ணாக்கும் வேண்டாமென்று எழுந்து வந்துவிட்டேன். என்னுடைய அரைகுறை ஹிந்தியறிவின் துனையோடும், கூடவே கூகிளாண்டவர் உதவியோடும் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி.


Na Me Mrityu Shanka Na Me Jati Bhedah
Pita Naiva Me Naiva Mata Na Janma
Na Bandhur Na Mitram Gurur Naiva Shishyah
Chidananda Rupa Shivoham Shivoham


நான் மரணமில்லாதவன்
சாதியுமில்லை, பேதமுமில்லை
தாயுமில்லை,தந்தையுமில்லை
நான் பிறந்தவனேயில்லை
உறவினரும் இல்லை, நண்பரும் இல்லை
குருவும் இல்லை,சிஷ்யனும் இல்லை
பேரன்பும், பெருவிழிப்பும் ஆனவன்
சிவனே நான், நானே சிவன்.

- ஆதி சங்கரர்

திருஉத்திரகோசமங்கை

அன்மையில் மனைவி வழி உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டி மாமனாரின் ஊருக்குச் சென்றிருந்த போது பக்கத்தில் இருந்த திருஉத்திரகோசமங்கை எனப்படும் உத்ரோசமங்கைக்கு(தற்போது இப்படித்தான் அழைக்கிறார்கள்.) போகும் வாய்ப்புக் கிடைத்தது.


பழமையும், வறுமையும் சூழ்ந்திருந்த சிவாலயம். கூடுதலாய் ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் மூலவரோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளக் கூட அனுமதிப்பார்கள் போலிருந்தது. பாவம் அத்தனை வறுமை. நான் கொடுத்த நூறு ரூபாய்க்கே ஏகப்பட்ட மரியாதைகளையும் கூடுதலாய் நிறைய கதைகளை கேட்க முடிந்தது. 

இத்தனைக்கும் இந்தக் கோவிலில்தான் உலகின் மிகப்பெரிய மரகதச்சிலை இருக்கிறது. குறைந்தது ஐந்தாறு அடி உயரத்தில் மூன்றிலிருந்து நாலடி அகலத்தில் இருந்தார் அந்த பச்சைக்கல் மரகத நடராஜர். பாதுகாப்புக் கருதியோ என்னவோ மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு அணிவித்திருக்கின்றனர். விலை மதிப்பில்லாத இந்த சிலையின் சந்தனக் காப்பை வருட்த்திற்கு ஒருமுறைதான் களைவார்களாம். ஏதோ கதை சொன்னார்கள். 

தென்னாடுடைய சிவன் பிறந்த்தே இந்த ஊரில்தானாம். அதெப்படி பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள் இந்த ஊரில் பிறந்திருக்க முடியும் என்கிற கேள்வி எழுந்தாலும் வாயைமூடி மௌனம் காத்தேன். வேறென்ன செய்ய முடியும். 

இந்தக் கோவில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதஸ்வாமி கோவிலும் முந்தையதாம். இந்தக் கோவிலின் வாசலில் ஒரு காலத்தில் கடலே இருந்ததாம். இராவணனின் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டிருக்கிறாராம். 3000 வருட பழமையான இலந்தைமரம்தான் இந்தக் கோவிலின் தலவிருட்சம்.இன்னும் உயிரோடு இருக்கிறது. இலந்தைப் பழங்களை பொறுக்கிக் கொடுத்தார் ஒரு சிவாச்சாரியார். 3000 வருடமெல்லாம் ஒரு மரம் உயிரோடு இருக்க முடியுமா என்கிற கேள்வி உங்களுக்குத் தோன்றினால் நாமெல்லாம் சேம் ப்ளட். :)

இதையெல்லாம் விட சுவாரசியமான ஒரு கதை சொன்னார்கள். அதாவது சுவாமிமலையில் பிரணவத்தின் பொருளை முருகன் சிவனுக்கு சொல்லியதாக கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கே சிவன் பிரவணத்தின் ரகசியத்தை பார்வதிக்குச் சொன்னாராம். அதனால்தான் இந்த ஊரின் பெயர் திரு உத்திர கோச மங்கை. அதாவது திரு என்பது சிவனையும், உத்தரம் என்பது அருளுதல் என்றும், கோசம் என்பது ரகசியம் என்பதாகவும், மங்கை என்பது பார்வதி என்றும் சொன்னார்கள். 

இந்தக் கோவிலுக்கு போனதில் எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள். ஒன்று எனது பெரியப்பாவின் பெயர் இந்த கோவிலின் மூலவரான மங்களநாதன் என்பதும், எனது ஒரு அக்கா(பெரியம்மாவின் மகள்) பெயர் அம்மன் பெயரான மங்களேஸ்வரி என்பதும். பின்னர் வீடு திரும்பிய பிறகு அம்மாவிடம் விசாரித்த போதுதான் சொன்னார் என் தாய்வழி பாட்டனார் குடும்பத்தின் குலதெய்வமே இவர்தானென.....